தமிழக ஆன்மீக வரலாற்றில் வள்ளலார் : In this article, we are providing Vadalur Vallalar History in Tamil Language, "வள்ளலாரின் சமூக பணிகள்" for our tami
தமிழக ஆன்மீக வரலாற்றில் வள்ளலார் / Vadalur Vallalar Temple History in Tamil
தமிழக ஆன்மீக வரலாற்றில் வள்ளலார் : In this article, we are providing Vadalur Vallalar History in Tamil Language, "வள்ளலாரின் சமூக பணிகள்" for our tamil readers.
தமிழக ஆன்மீக வரலாற்றில் வள்ளலார் / Vadalur Vallalar History in Tamil
தமிழகத்தின் ஆன்மீக வரலாற்றை ஐந்து பெரிய நீர்க்கால்களாகப் பகுத்துக் காணலாம். நாட்டார் சமயம், சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய ஐந்தனுள் பௌத்தத்தின் தொல்லெச்சங்கள் மட்டுமே இன்று தமிழ்ச் சமூகத்தில் சமய வாழ்வில் காணக்கிடக்கின்றன. சமணம், வாழ்கின்ற மதமாக இருந்தாலும்கூடத் தமிழ்நாட்டின் வட மாவட்டங் களில் மட்டுமே கண்ணிற்குத் தெரிகின்றது. சைவ, வைணவ நெறிகளும் இருபதாம் நூற்றாண்டின் இயக்கங்களாலும் ‘உலகமயமாக்கல்' பின்னணியிலும் தங்கள் இருப்பை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளன. நாட்டார் சமயத்தின் கணிசமான பகுதிகளும் ‘நகரமயமாதல்' என்னும் தளத்தில் தம் வேர்களை இழந்து வருகின்றன.
தமிழகத்தின் ஆன்மீக வரலாறு தொடர்ச்சி யானது. இந்த வரலாற்றுப் பின்னணியில் வள்ளலாரோ 19ஆம் நூற்றாண்டின் வெற்றி பெற்ற ஒரு கலகக் குரலை எழுப்பியவர். அந்த வெற்றி இருபதாம் நூற்றாண்டில் தொடர்கிறதா என்பது தனித்த விவாதத்திற்குரிய பொருளாகும். (வள்ளலாரைப் போல இருபதாம் நூற்றாண்டு ஆன்மீக வரலாற்றில் கலகக் குரலாக எழ ‘முயன்ற' ஆதிபராசக்தி மன்றத்தை இங்கு நினைத்துக்கொள்ள வேண்டும். இரண்டுமே பெரும்பாலும் தமிழ்நாட்டின் வடபகுதியில் மட்டுமே கிளை பரப்பியவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.)
தமிழ்நாட்டுப் பெருஞ்சமய நெறிகளில் வள்ளலாரை எதனோடு சேர்த்துப் பார்ப்பது என்பது அடிப்படையான ஒரு கேள்வியாகும். ‘பூசுவதும் வெண்ணீ று' என்பது சைவ சமயத்திற் குரிய முதல் அடையாளம் ஆகும். இந்த அடையாளமும் கோயில் வழிபாடும் வள்ளலாருக்குக் குடிப்பிறப்பாக வந்தவையே. வள்ளலார் தம் இளமைக் காலத்தில் திருத்தணிகைத் தவத்தின் மீதும் பின்னர்ச் சிதம்பரத்தின் மீதும் பற்றுக்கொண்டிருந்தார் என்ற செய்தி அவரது பாடல்களில் பொதிந்துள்ளது. பின்னர், புதுநெறி கண்ட பிறகும் திருநீற்று அடையாளத்தை அவர் கைவிடவில்லை. எனவே வள்ளலாரைச் சைவ மரபிற்குள்ளாகவே நிறுத்திப் பார்ப்பதே சரியானதாக இருக்க முடியும். சமண சமயத்தின் தொல்லறமாகவும் சைவத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான ‘புலால் உண்ணாமை' அறத்தினை அவர் ‘உயிர் இரக்க ஒழுக்கமாக' (ஜீவகாருண்யமாக) முன்னிறுத்தினார். மனித உயிர்களைத் தாண்டிய மற்ற உயிர்கள் மீதும் படிந்த அவரது இரக்கப் பார்வை மனிதன் மீது திரும்பியபோது தன்னியல்பாகவே அது சாதி மறுப்புக் கொள்கையாக விளைந்தது.
மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருணாச்சிரமமெனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவும் மற்றைப் புலையும் அழிந்தது
குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
கொதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
என்ற வருணாச்சிரமத்திற்கு எதிரான அவரது குரல் 19ஆம் நூற்றாண்டின் ஒரு கலகக் குரலேயாகும். அதுவே முதற்குரல் ஆகும் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.
இந்தப் பின்னணியில் ஆன்மிக வரலாற்றில் வள்ளலாரின் இடத்தைக் கணிக்க முயன்றவர்களாக, ம.பொ. சிவஞானம், ஊரன் அடிகள், ராஜ் கௌதமன், கி. சுப்பிரமணியன், ப. சரவணன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரை 'உணர்வறிய திருஞானம், ஒப்பரிய பெருஞானம்' என்று பேசப்படும் சைவ சமயப் பின்னணியில் வள்ளலாரைக் காண முற்படுகின்றது.
தமிழ்நாட்டுச் சைவ சமய வரலாறு சிக்கல், சிடுக்கல்கள் எதுவுமில்லாத ஒன்றாகவே சைவ சமய ஆய்வாளர்களால் எழுதப்படுகின்றது. ஆனால் உண்மையில் காலந்தோறும் சைவ சமயத்திற்குள் எழுந்த மோதல்களும் முரண்களும் அடுத்து வரும் காலத்தில் உள்வாங்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளன; அல்லது செரிமானம் செய்யப்பட்டுள்ளன. இந்த மோதல்களின் தொடர்ச்சியாகவே நாம் வள்ளலாரை இனம் காண முடியும்.
சைவத் திருமுறைகள் எனப்படும் தோத்திர நூல்கள் பன்னிரண்டில் திருமந்திரமும் திருவாசகமும் அடங்கும். இந்த இரண்டு நூல்களும் வள்ளலாருக்குப் பிடித்தவை.
சைவ சமயத்தில் திருமுறைகள் ‘தோத்திர நூல்கள்' எனவும் தத்துவ நூல்கள் 'சாத்திர நூல்கள்' எனவும் வழங்கப்பெறுகின்றன. திருமுறைகள் 12 என்பதுபோல 'மெய்கண்ட சாத்திரம்' என்ற பெயரில் 14 நூல்கள் தத்துவ நூல்களாகத் தொகுத்துக் காட்டப் பெறுகின்றன.
சைவர்களின் சாத்திரநூல் பட்டியல் சிக்கலானது. இந்தப் பட்டியலுக்கு முந்திய சைவ சாத்திர நூல் “ஞானாமிர்தம்” என்பதாகும். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாலீசுவரத்தில் இருந்த கோளகி மடத்திலிருந்து பிறந்தது. திருவாலீசுவரம் கோயில் முழுமையான கற்கோயிலாக முதலாம் இராசேந்திரசோழனால் எடுக்கப்பட்டதாகும். இது பாசுபத சைவர்கள் வாழ்ந்த நிலப்பகுதியாகும். இங்கிருந்து 18கி.மீ. தொலைவிலுள்ள குற்றாலத்திற்கருகில் ‘பாசுபதப் பேரேரி' என்பது ஒரு குளத்தின் பெயராக இன்றும் வழங்கிவருகின்றது.
முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் பாசுபத ஆகம விதிகளை அடிப்படையாகக் கொண்டதாகும் முதலாம் இராசராசனுக்கும் அவனது மகனுக்கும் காசுமீரத்துப் பாசுபதசைவர்களே குருமார்களாக இருந்து வந்துள்ளனர். அவர்களது காலப்பகுதியில் பிற்காலத்திய சைவமான சித்தாந்தச் சைவத்தின் சுவடுகள் ஒன்றிரண்டை மட்டுமே காணமுடியும். வள்ளலார் திருமந்திரத்தைத் தோத்திர நூலாகக் கொள்ளாது' 'சாத்திர நூலாகக் கொண்டதே' சரியானதாகும். அது பாசுபத சாத்திர நூலாகும். திருமந்திரம் மனித உடலைக் கொண்டாடும் நூலாகும். 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்பது திருமூலர் வாக்கு.
'கடவுளியியற்கை விளக்கத்திற்கு இடமாகிய சீவதேகங்கள் என்கிற ஆலயங்கள்' என்கிறார் வள்ளலார் (கி.சுப்பிர. ப. 37). இந்த உணர்வு இறந்த உடலைச் சுடக்கூடாது என்பதுவரை அவரைக் கொண்டு செல்கின்றது.
பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
இனிச்சாகும் பிணங்களே நீர்
கணங் கழுகுண்டாலும் ஒரு பயனுண்டே
என்ன பயன் கண்டீர் சுட்டே (5609)
(கி. சுப்பிர. ப. 46)
என்பது திருஅருட்பாவாகும். வள்ளலார் தனக்குப் பிடித்த தோத்திர நூலாக திருவாசகத்தையே குறிப்பிடுகின்றார்.
வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்.
என்ற பாடல் வள்ளலாரின் பாடல்களில் குறிப்பிடத் தகுந்த தாகும். “திருவாசகத்தில் பிரசார வேகம் தளர்ந்து அது ஆன்மீக அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. திருவாசகத்தின் பக்திச் சுவையின் தித்திப்பில் தெவிட்டாத ருசி கண்ட இராமலிங்கரின் 6ஆம் தொகுப்பிலுள்ள பாடல்களில் அது பிரமாதமாக வெளிப்பட்டுள்ளது” என்று மதிப்பிடுகிறார் ராஜ் கௌதமன் (ப. 42). சோழர்காலக் கல்வெட்டுக்களிலிருந்து அப்பர், சம்பந்தர் இருவரின் பாடல்கள் மட்டுமே அவர்களால் தேவாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது தெரிகின்றது. சுந்தரருடைய தேவாரம் 'தம்பிரானார் திருப்பாட்டு' என்ற பெயரிலேயே அக்காலத்தில் அழைக்கப்பட்டது. சோழர் காலத்திலும் பிற்காலப் பாண்டியர் காலத்திலும் திருவாசகப் பாடல்கள் கோயில்களில் விண்ணப்பம் செய்யப்படவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். அதற்கான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.
பெரிய புராணக் கதையின் காலம் மாணிக்கவாசகருக்கு முற்பட்டதாயினும் அதனைச் சமய இலக்கியம் ஆக்கிய சேக்கிழாரின் காலம் மாணிக்கவாசகருக்குப் பிற்பட்டதே. அவர் மாணிக்கவாசகரைக் குறிப்பாகக்கூட ஓர் இடத்திலும் சுட்டவில்லை. பாசுபத சைவநெறிப்படி அமைக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலையும் அவர் சுட்டவில்லை. இவ்வகையான விலகல்களும் ஒதுக்கல்களும் உள்வாங்கிக் கரைத்தலும் ஒவ்வொரு சமயத்திற்குள்ளாகவும் வரலாறு நெடுகிலும் நடந்து வருகின்றன. வள்ளலாரின் மனங்கவர்ந்த மாணிக்கவாசகர் நடு நாட்டுத்தலமான 'சிதம்பரத்தைப் பாடியுள்ளார். காவிரிக் கரையோரத் தலம் எதனையும் பாடவில்லை . அவர் அத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. தேவாரம் காட்டும் தமிழ்த் தேசியத் திற்கு மாற்றாகச் சிவபெருமானைத் 'தென் பாண்டி நாடன்' என்றும் 'மதுரையார் மன்னன்' என்றும், 'மதுரை மண் சுமந்தான்' என்றும் 'பாண்டி நாடே பழம்பதி' என்றும் ஒரு குறுந்தேசியவாதத்தைக் (Subnaturalism) கட்டமைக்க முயன்றார் என்பது தெரிகின்றது. இதனை அரசியல் முரணாக மட்டும் கருத இயலவில்லை. ஏதோ ஒரு வகையில் இது சித்தாந்த முரணாகவும் அமைந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் எழுந்த சித்தாந்த சைவம், மாணிக்கவாசகரைக் கொண்டாடியது. ஆனாலும் திருவாசகம் கோயில் வழிபாட்டிற்கு அல்லாமல் வீட்டு வழிபாட்டிற்குரிய ‘முற்றோதுதல்' (பாராயண) நூலாகவே அமைந்துவிட்டது. “திருவாசகத்திற்குச் செய்யுளால் அமைந்த விளக்கமே திருவருட்பா” என்று துரைசாமிப்பிள்ளை குறிப்பிட்டதாகப் புரிசை நடராசன் எழுதுகின்றார். திருவாசகத்தின்மீது சோழர்களின் சைவ அரசு கொண்டிருந்த விலகல் போலவே பாசுபத சைவ நூலான திருமந்திரத்தைத் தோத்திர நூலாகக் காட்ட முயலும் விலகல் போக்கு சித்தாந்த சைவத்திலும் காணப்படுகிறது. வள்ளலாரின் மனம் கவர்ந்த திருமந்திரமும் திருவாசகமும் சைவ மரபுகளில் பிற்காலத்தில் உள்வாங்கிக் கரைக்கப்பட்டன என்பதே இதன் பொருளாகும்
சித்தாந்த சைவம், வேதத்தின் தலைமையினை ஏற்றுக் கொண்ட, ஆகம நெறிப்படி அமைக்கப்பட்ட கோயில்களை மையமாகக் கொண்டதாகும். அதனுடைய 'தலைக்கோயில்' தில்லை எனப்படும் சிதம்பரமாகும். தேவகுலம், பொது, அம்பலம், தளி, கோயில் என்பன கோயில்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களாகும். கேரளத்தில் இன்றளவும் கோயில்கள் அம்பலம் என்ற பெயராலே அழைக்கப்படுகின்றன. அங்கு கோயில் பணியாளர்களுக்கு அம்பலவாசிகள் என்றே பெயர். அவர்களின் ஒரு பிரிவினர் ‘பொது ஆள்' (பொதுவாள் - புதுவாள்) என்றே அழைக்கப்படுகின்றனர். தில்லைக் கோயிலைப் பாடும் வள்ளலார் 'திருப்பொதுவில் ஆடுகின்ற அரசே' என்றும் 'அம்பலப் பாட்டே அருட்பாட்டு' என்றும் பொது, அம்பலம் என்ற இரண்டு சொற்களை வலியுறுத்துகின்றார். ஆனால் தில்லைக்கோயில் இன்றளவும் பொதுக்கோயிலாக அமையாமல் தில்லை மூவாயிரவர் என்ற பிராமண சாதிக்குரிய சொத்தாகவே இருந்துவருகின்றது என்பதையும் உணர வேண்டும். தில்லைக் கோயிலில் வள்ளலார் புராணப் பொழிவுகள் நடத்தியுள்ளார். ஆறுமுக நாவலருக்கும் அவருக்குமான முரண்பாடு. அங்கேதான் தோன்றியது. தில்லைக்கோயில் அதற்கு முன்னரும் பல முரண்களுக்குக் களனாக இருந்துள்ளது என்பது வரலாறு. மூர்த்தி நாயனாருக்குத் தில்லை மூவாயிரவர் முடிசூட்ட மறுத்த கதை பெரியபுராணத்தில் பதிவாகியுள்ளது. தில்லைக் கோயிலிலிருந்து தேவார, திருவாசகங்கள் ‘மீட்டெடுக்கப்பட்ட' கதையை திருமுறை கண்டபுராணம் பேசுகின்றது. இதுவும் ஏதோ ஒரு கருத்தியல் சார்ந்த முரணாகவே இருக்க வேண்டும்.
“சிதம்பரம் தற்காலத்தில் நமது உயிர்த்துணைவராகிய நடராஜரைப்பற்றி நாம் போவதற்கும் இரண்டொரு தினம் இருப்பதற்கும் தக்கதேயன்றி வேறொரு வகையாலும் தக்கதில்லை. ஆயின் அது கலிகால வண்ண ம்” என்று 1861இல் இரத்தின முதலியார்க்கு எழுதிய கடிதத்தில் வள்ளலார் குறிப்பிடுகின்றார் (ம.பொ .சி. ப. 200, 2001).
“1871இல் வடலூரில் தமது சத்தியஞான சபையை நிர்மாணித்த பிறகு சிதம்பரம் கோயிலை அவர் திரும்பிப் பார்க்கவில்லை என்று தெரிகிறது” என்கிறார் ராஜ்கௌதமன் (ப.107).
தில்லைக் கோயிலின் மீது வள்ளலாருக்கு இருந்த ஈடுபாடே வடலூரில் தான் நிறுவிய சபைக்கு, ‘உத்தர ஞானசிதம்பரம்' (அதாவது வடக்குச் சிதம்பரம்) என்று பெயரிட வைத்தது. ஆனால் வள்ளலார் கோயில் வழிபாட்டுக்கு அடிப்படையான உருவ வழிபாட்டைத் தாம் நிறுவிய ஆன்மீக மையத்தில் நிராகரித்தார். அதற்குக் 'கோயில்' என்று பெயரிடாமல் 'சபை' என்று பெயரிட்டார். கோயில்களில் சமயம்சார்ந்த அடியவர்களுக்கு உணவளிக்கும் மரபு தமிழகத்தில் தொன்றுதொட்டே நடந்து வந்துள்ளது. தில்லையிலும் அவ்வாறு உணவளிக்கப்பட்டதனை 'அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம்' என்ற அப்பர் தேவாரத்தினால் அறியலாம். (பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் பிராமணருக்கு மட்டுமே அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன. பெருந்தொகையில் ஏழை எளியவர் அனைவரும் உண்டு பசியாறும் ஏற்பாட்டைச் செய்தவர் முதன் முதல் அடிகளார்தாம் என்பதே உண்மை (தமிழக வரலாறு கே.கே. பிள்ளை , பக். 491). அடியவருக்கு உணவளித்தல் என்ற கோயில் நடைமுறையினையும் சாதி, மதம் கடந்து ஏழை. எளியவர்களுக்கு உணவளித்தல் என்ற நடைமுறையாக மாற்றிக் காட்டினார்.
சைவக்கோயில்கள் சாதிமரபிற்கு உட்பட்டவையே. ஆனால் தில்லைக்கோயிலோ ஒரு சாதிப் பிரிவுக்கு மட்டுமேயுரிய சொத்தாகவும் (Property) இருந்து வருகின்றது. ஆறுமுக நாவலர் போன்ற அறிஞர்களை ஆதரித்த சைவத் திருமடங்களும் (தமிழகத்தில் பதினெட்டு வகையான சைவத் திருமடங்கள் உள்ளன) சாதிக் கயிற்றால் கட்டப்பட்டவையே.
“சமயச் செயல்பாடுகள் மடங்கள் என்னும் அதிகார மையங்களான நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட காலச் சூழலில் வள்ளலார் வாழ்ந்தார். அம்மடங்கள் அனைத்தும் சாதிய நியதியைப் பேணியவை. அந்தச் சூழலில் இவரது தனித்த போராட்டம் வியப்பளிக்கும் வகையில் உள்ளது” என்று மதிப்பிடுகிறார் வீ. அரசு. (வள்ளலார் கடிதங்கள் முன்னுரை) 'இராமலிங்கம்பிள்ளை தம் சாதி கீழாயிருத்தல் கண்டே ' என்பது மறுப்பு நூலில் உள்ள ஒரு தொடர் என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
வள்ளலார் பசிப்பிணி நீக்கும் செயலுக்கு அளித்த முதன்மை ஆன்மீக வரலாற்றில் ஒரு புதுமையாகும். 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பல பஞ்சங்கள் ஏற்பட்டன. காலனிய ஆட்சி யின் பஞ்ச நிவாரண ஆவணங்களே இப்பஞ்சங்களின் கொடுமையை நமக்கு விளக்கப் போதிய ஆவணங்களாகும். எனவே பசிப்பிணியை மனிதகுலத்தின் முதல் எதிரியாகக் கண்டு வள்ளலார் அஞ்சியதற்கு அவர் வாழ்ந்த காலச் சூழலும் அரசும் ஒரு காரணமாகும். ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக' என்ற அறச் சீற்றத்துக்கும் இதுவே காரணமாகும். எனவே வள்ளலார், சைவம் என்ற எல்லையைத் தாண்டி சமரசம் என்ற பெருவெளியில் நுழைகின்றார். அதாவது தன் சமகாலச் சைவ மடங்களையும் வள்ளலார் நிராகரிக்கின்றார்.
ஆனால் சமகாலச் சைவத்தால் வள்ளலாருடன் முரண்பட மட்டுமே முடிந்தது. மரபுவழி வரலாற்றின்படியே அவரை விலகவோ விலக்கவோ இயலாமல் போயிற்று. ஏனென்றால் வள்ளலாரின் காலம் தொடர்புச் சாதனங்கள் வளர்ச்சி பெறும் காலமாகவே இருந்தது. அச்சு எந்திரம், இரயில் வண்டி, பங்கி வண்டி ஆகிய ‘நவீனங்கள்' அவரது அனுபவ எல்லைக்குள் வந்துவிட்டன. எனவே வள்ளலாரைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவ சமய ஆன்மீக வரலாற்றில் எழுந்து ‘வெற்றி பெற்ற ஒரு முரண்பாடு' என்று மதிப்பிடலாம்.
தமிழக வரலாற்றில் வள்ளலாரைப் பற்றிய மிகை மதிப்பீடுகளே நிறைய வந்துள்ளன. அவரது கால அச்சியந்திர வளர்ச்சி, மதங்களின் பெருத்த ஆதரவு பெற்ற ஆறுமுக நாவலருடன் கருத்து மோதல் நிகழ்த்தியமை, ஈழத்து வேளாளர்களிடையே சிதம்பரம் கோவிலின் செல்வாக்கு, 'பொது' என்பதற்கு சாதி - மதம் கடந்து அவர்கொண்ட பொருள், சிதம்பரம் கோவிலை உரிமை கொண்டாடிய ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அதிகாரம், வள்ளலார் பாடலைக் கோவிலில் பாடமுற்பட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு, தன் வாழ்நாளின் பிற்பகுதியில் சிதம்பரம் கோயிலை விட்டு முற்றிலும் நீங்கியமை, தான் தொடங்கிய ‘சத்திய ஞான சபைக்கு உத்தர (வடக்கு) ஞான சிதம்பரம்' என்று பெயரிட்டது, ஆடும் மூர்த்தியின் திருவுருவத்துக்குப் பதிலாக ஒளிவிளக்கு ஒன்றினை ஏற்றி வழிபடச் செய்தது - இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டவாறே சிதம்பரம் கோவிலை அணுக வேண்டும்.
சிதம்பரம் கோயில் குறித்த எல்லாக் கதைகளும் ‘பொது' எனப்படும் தீட்சதர்களின் சாதி அமைப்பைச் சுற்றியே வருகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன் தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம், சிதம்பரம் கோவிலின் அர்த்த மண்டபத்தில் தமிழ்பாட ஒரு இயக்கம் நடத்தியதும் ‘பொது'விடத்தில் அவர் தோற்றுப் போனார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
துணை நூல்கள்
1. ம.பொ. சிவஞானம், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, 2001 (நான்காம் பதிப்பு).
2. ராஜ் கௌதமன், கண்மூடிவழக்கம் எல்லாம் மண்மூடிப் போக.. ! சி. இராமலிங்கம் (1823-1874), 2001.
3. R. Sunthara Lingam, Politics and National Awakening in South India 1852 - 1891, The University of Arizona (unpublished).
COMMENTS