மரபும் மீறலும் - சாதி சமய அரசியல் பின்னணி / Tradition Caste and Relion In Tamilnadu in Tamil Language மரபு வழிப்பட்ட தமிழ்ச்சமூகம் சாதிய அடுக்குகளால்
மரபும் மீறலும் - சாதி சமய அரசியல் பின்னணி / Tradition Caste and Relion In Tamilnadu in Tamil Language
மரபு வழிப்பட்ட தமிழ்ச்சமூகம் சாதிய அடுக்குகளால் ஆனது. ‘சாதிகளை மீறிய தனிநபர்' என்று மரபுவழிச் சமூகத்தில் யாருமில்லை . எனவே சமூகம் ஆக்கிய எல்லா நிறுவனங்களிலும் கருத்தியல்களிலும் சாதியும் அவற்றின் அடை யாளங்களும் எல்லைகளும் கவனமாகப் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. நிலமானியச் சமூக அமைப்பில் உற்பத்தித் தளங்களும் கால மும் வெளியும் சாதியப்படி நிலை வரிசைக்கு ஏற்பவே பங்கிடப்பட்டன. சமூகத்தின் அடித்தள மக்களின் ஆன்மீகத் தளத்திலும் சாதிப்படிநிலை மரபுகள் கடுமையாக விதிக்கப்பட்டன. மரபுகள் மீறப்படும்பொழுது மீற முயன்றவர்கள் நேரடி வன்முறைக்கு ஆளானார்கள். நந்தன் கதை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
அரச ஆதரவு பெற்ற பெருங்கோயில்களை மையமாகக் கொண்டு எழுந்த ஊர்களில், நிலப்பரப்பு அல்லது தளம் அல்லது வெளி (space) சாதியப் படிநிலைக்கு ஏற்பவே பிரிக்கப்பட்டது. கோயிலைச் சுற்றியுள்ள பகுதி பார்ப்பனர்க்குரியதாக (மாடவீதி சன்னிதி வீதி) அதற்கு அடுத்த பகுதி வேளாளருக்குரியதாக (ரத வீதிகள்) அதற்கும் அடுத்த பகுதிகளும் அவற்றிற்கு இடையிலான சந்துகளும் கோயிலோடு தொடர்புடைய பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு உரியனவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்பு, பிற பகுதிகளில் இருந்து சற்றுத் தொலைவில் வயல்களுக்கு நடுவில் அல்லது நீர்க்கால் களுக்கு மறுபுறத்தில் தள்ளப்பட்டு இருக்கிறது.
பெருந்தெய்வக் கோயில்கள் இல்லாத ஊர்களில் அய்யனார் (அல்லது ஊர் அம்மன்) கோயில் அமைந்துள்ளது. இது 'ஊர்ப்பொது'வாகக் கருதப்படுகின்றது. அதற்கு முன்னர் அமைந்துள்ள பெரிய காலிமனை அறுவடைக் களமாக, ஊர் மந்தையாக, திருவிழாக் கூத்துக்கள் நடைபெறும் இடமாக, ஊர்ப் பஞ்சாயத்து அல்லது ஆதிக்க சாதிப் பஞ்சாயத்து கூடும் இடமாக அமைந்துள்ளது. கோயிலையும் காலி மனையையும் சுற்றி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகள் அந்த ஊரில் ஆதிக்கமுடைய பிற்படுத்தப்பட்ட சாதியாரால் பங்கிட்டுக் கொள்ளப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் வயல்களுக்கு இடையே (அல்லது) நீர்க்கால்களுக்கு மறுபுறத்தில் ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள். விதிவிலக்காகவன்றி தமிழ்நாட்டு ஊர்களில் 'வெளி' பங்கீடு செய்யப்பட்டுள்ள பொதுவான முறை இதுவே யாகும்.
பெருந்தெய்வமோ, நாட்டார் தெய்வமோ திருவிழா நாட்களில் சுற்றிவரக்கூடிய நிலப்பகுதியே அத்தெய்வத்தின் அருளாட்சி எல்லையாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் பெருவாரியான மக்கள் வணங்கும் தெய்வங்களின் அருளாட்சி எல்லையில் இருந்து வெளியே தள்ளப்பட்டுள்ளன. எனவே தெருவில் வலம்வரும் தெய்வங்கள் இம்மக்களின் குடியிருப்புப் பகுதிக்கு வருவதில்லை. தங்கள் வாழ்விடத்தருகில் மாலை அணிவித்தோ, சூடம் ஏற்றியோ, பொங்கல் இட்டோ, தேங்காய் உடைத்தோ வழிபடும் வாய்ப்பு இம்மக்களுக்கு இயல்பாகவே மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் மேல் சாதித் தெய்வங்களின் 'அருள் வரம்புக்கு' விலக்கப்பட்ட மக்கள், அவற்றின் ‘அதிகார வரம்புக்கு' மட்டும் உட்படுத்தப்பட்டனர்.
நாட்டார் தெய்வத்தின் வழிபடு எல்லைக்குள் உரிமை மறுக்கப்பட்ட மக்கள் அதன் அதிகார வரம்புக்கு கீழ்ப் பட்டவராகவே வாழ்கின்றனர். ஏனென்றால் ஊர்ச்சபை என்பது விழாக் காலங்களில் தெய்வத்தின் பெயரால் கூடுதல் அதிகாரம் செலுத்துகிறது. திருவிழாவுக்கான ஊர் வேலைப் பங்கீடுகள், ஊர்ச்சபையினரால் செய்யப்படுகின்றன. தெய்வ வழிபாட்டில் உரிமையில்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் திருவிழாவுக்கான கடுமையான உடல் உழைப்பு வேலைகள் பங்கிட்டு விதிக்கப்படுகின்றன. விழாவுக்கான களங்களைச் சுத்தம் செய்தல், ஊர் சாற்றுதல் (ஊர் சாட்டுதல்), ஊர்க் கழிவுகளை அகற்றிச் சுத்தம் செய்தல், தேர்க்கால்களுக்குக் கட்டை இடுதல் ஆகியவற்றோடு பிற சிறிய வேலைகளும் விதிக்கப்படுகின்றன. இந்த மரபுகள் பெரும்பாலான ஊர்களில் பத்தாண்டுகளுக்கு முனவரை வலிமையாகக் காலூன்றியிருந்தன.
காலனி ஆதிக்கம் தொடங்கிய காலம்தொட்டு ஊர்ச்சபை தன் அதிகாரத்தினை ஒதுக்கப்பட்ட மக்கள் மீது பயன்படுத்துவதில் நெருக்கடிகள் தோன்றத் தொடங்கின. 1830களில் கிரசன்ட் பத்திரிகையினை வாங்கி நடத்திய லெட்சுமி நரசு செட்டி தலைமையிலான சென்னை நகரத்து மேல்சாதி மக்கள் கும்பினி (கம்பெனி) அரசாங்கத்தோடு முதலில் முரண்பட நேர்ந்தது. இந்த மரபுவழி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளத்தான். கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் தலித்மக்கள் ஊர்த்திருவிழா வேலைகளைச் சாதிமரபுப்படி செய்யுமாறு கட்டாயப்படுத்தப் பட்டார்கள். சில இடங்களில் இதற்கு எதிரான விழிப்புணர்ச்சி தோன்றியது. எனவே கும்பினி அரசாங்கம் ஊர்த் திருவிழாக்களில் மதம் மாறிய கிறித்துவ மக்களை அடிமை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்தே லெட்சுமிநரசுசெட்டி தலைமையிலான மேல்சாதி மக்கள், அரசு தங்களின் மதச் சுதந்திரத்தில் தலை யிடலாகாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். தெய்வ வழிபாட்டை முன்நிறுத்திய அதிகார மரபுகள், ஒடுக்கப்பட்ட சாதி மக்களால் மீறப்பட்டு மோதல் தொடங்கியதற்குத் தமிழக வரலாற்றில் இதுவே முதல் சான்றாகத் தெரிகிறது.
அண்மைக்காலமாக தலித் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உரிமை உணர்வு, அவர்களுக்குக் கிடைத்துள்ள புதிய அரசியல் பலம் ஆகியவை அளவிலும் பண்பிலும் இம்முரண்பாட்டினைக் கூர்மைப்படுத்தி வருவதைக் காண்கிறோம். 1998இல் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். முதலாவது நிகழ்ச்சி, தேவகோட்டைக்கருகில் கண்டதேவி கிராமத்தில் கோயில் தேரோட்டத் திருவிழாவில் ஏற்பட்ட மோதலும் கலவரமும் ஆகும். சாதிய அதிகார அமைப்பில் கனமான தேரை இழுத்துச்செல்லும் உரிமையினை எல்லா இடங்களிலும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் தாங்களே பெற்றுள்ளனர். உட்பிரிவுகள் (அல்லது) குடும்பப் பெருமை ஆகிய மரபு வழிக் காரணங்களை முன் நிறுத்தி தேருக்குரிய 4 (அ) 5 வடங்களைத் தங்களுக்குள் கரை என்ற பெயரில் பங்கிட்டுக் கொள்கிறார்கள். பிறகு தேர் இழுப்பதற்கான கோயில் மரியாதையும் அவர்களுக்கு ஏகபோக உரிமையாக இருக்கிறது. தலித் மக்கள் “கோயில் திருவிழாவுக்கு மற்ற வேலைகளைச் செய்யும் நாங்கள் தேர் வடத்தையும் தொட்டு இழுப்போம். அதற்கான மரியாதையினையும் நாங்கள் பெற வேண்டும்” என்ற உரிமைக் குரலை எழுப்பினர்.
இந்த முரண்பாட்டுக்கு அந்த நிலப்பகுதியில் அழுத்தமான மற்றொரு சமூகக் காரணமும் உண்டு. தேவகோட்டை, சிவகங்கைப் பகுதிகளில் கள்ளர் சாதியினரின் ‘நாடு' அமைப்பு இன்னும் இருந்து வருகிறது. இதன் வழி எல்லாச் சாதியினர் மீதும் அதிகாரம் செலுத்த அவர்களால் முடியும். அண்மைக் காலம்வரை அரசுக்குப் போட்டியாகப் பொதுவளங்களை அதாவது புறம்போக்கு மர ஏலம், கண்மாய், மீன்பாட்டம், கள்ளச் சாராயம் காய்ச்சுதல் ஆகியவற்றில் பிற சாதியினர்மீது அவர்கள் மேலாதிக்கம் செலுத்திவந்தனர். எனவே கண்டதேவியில் எழுந்த தலித் மக்களின் உரிமைக்குரல் ‘நாடு' அமைப்பிற்கு இடப்பட்ட சவாலாகும். தலித் மக்களின் புதிய அரசியல் தலைமை, சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆணையோடு தங்களின் உரிமைகளை நிலைநாட்ட முயன்றபோது மாவட்ட நிர்வாகம் அவர்கள் பக்கம் நிற்க வேண்டியதாயிற்று. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை உணர்வுக்கும் மரபு வழிச் சாதி மேலாண்மைக்கும் இடையில் நடந்த மோதல் துப்பாக்கி சூட்டில் முடிந்தது.
கோவில்பட்டியில் அம்மன்கோவில் திருவிழாவில் தேருக்குக் கட்டை இடும் கடினமான வேலையினை மரபுவழி செய்து வந்த தலித் மக்கள் திருவிழா நடத்தவும் உரிமை வேண்டினர். 10 நாள் திருவிழா நடத்தும் உரிமையினையும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் கங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டதனால் புதிய உரிமையினைத் தலித் மக்களுக்குத் தர மறுத்தனர். இங்கும் காவல்துறையின் தலையீடும் கலவரமும் தவிர்க்க முடியாதவை ஆகின.
கோயில் நுழைவும் கோயில் மரியாதையும் திருவிழா நடத்தும் உரிமையும் நாட்டார் வழிபாட்டு முறைகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குத் தங்கள் சமூக அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் கருவிகளாகும். தலித் மக்களின் உரிமைக்குரல் என்பது ஆன்மீகத் தேட்டத்திற்கான உரிமைக் குரலாக இல்லாமல் மரபு வழிச் சமூக அதிகாரத்தைக் கட்டுடைக்கும் வலிமையான குரலாக மாறுவதைப் பிற்படுத்தப்பட்ட சாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மதுரை முகவை, மாவட்டங்களில் நாட்டார் தெய்வக் கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா முளைப்பாரித் திருவிழாவாகும். முளைப்பாரியினை இடும் மண்கலத்தைக் கிராமத்து வேளார் செய்து கொடுக்க வேண்டும். சில ஊர்களில் கோயில்களிலும் சில ஊர்களில் வண்ணார் வீடுகளிலும் முளைப்பாரி வளர்க்கப்படும். முளைப்பாரி எடுக்கும் உரிமை அந்தந்தக் கிராமத்தில் ஆதிக்கமுடைய பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கே உண்டு. ஆனால் முளைப்பாரி வலம் வரும் தெருக்களைச் சுத்தம் செய்யும் கடமை தலித்மக்கள் மீது சுமத்தப்பட்டு இருந்தது. ஆனால் அவர்களுக்கு முளைப்பாரி எடுக்கும் உரிமை கிடையாது. மானாமதுரைக்கருகில் துத்திகுளம் என்னும் ஊரில் நான்கு ஐந்து ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த முளைப்பாரித் திருவிழாவினை 1996ஆம் ஆண்டு மீண்டும் கொண்டாட முயன்றனர். புதிய அரசியல் தலைமையினால் எழுச்சி பெற்றுள்ள தலித் இளைஞர்கள் ‘நாங்களும் ஓடு போடுவோம்' (முளைப்பாரி எடுப்போம்) என்று குரல் கொடுத்தனர். அதற்குச் சம்மதிக்காத மேல் சாதியினரால் முளைப்பாரித் திருவிழா கொண்டாடுவது கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப் பட்டுவிட்டது.
இது அல்லாமல், நகர்ப்புற வாழ்க்கையும் சாதி அடையாளம் தேவையற்றதுமான சூழ்நிலை உருவாகின்றபோது ஒடுக்குகின்ற சாதியினர் பின்வாங்கிப் போவதற்கும் ஓர் எடுத்துக்காட்டு கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஒரு ஊரில் செருப்பு தைக்கும் தொழிலாளியான செம்மார் சாதியினர் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக, தங்கள் கோயிலில் திருவிழா நடத்துவதற்கு முன்னர், ஊருக்குள் மற்ற சாதியாரைப் போலவே ஊரில் உள்ள பெரிய அம்மன் கோயிலில் சென்று திருநீற்றை எடுத்து வழிபட்டு வருகின்றனர். அந்தப் பெரிய அம்மன் கோயில் பூசாரி உட்பட ஒடுக்கு முறைச் சாதியினர் இந்த நிகழ்ச்சியைக் கணக்கில் எடுக்கவும் இல்லை; கண்டுகொள்ளவும் இல்லை.
அதே ஊரில் ‘மேல்சாதி' வேளாளருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் ஒரு நாட்டார் தெய்வக் கோயிலின் மீது உரிமை வழக்கு ஏற்பட்டது. தீர்ப்பின்படி கோயில், மேல்சாதியாருக்கு உரிமையானதும், பிற்படுத்தப்பட்ட சாதியார் கோயில் முன்பிருந்த காலியிடத்தில் புதுக் கோயில் கட்டி ‘புது உலகம்மன்' எனப் பெயரிட்டுக் கொண்டனர். சாதிப் பிரிவினை அடிப்படையில் ஒரு உரிமையியல் வழக்காக (Civil Suit) வடிவெடுத்த பின்னர் மனித உரிமை ஒடுக்கு முறையோ மீறலோ இங்கே நிகழவில்லை.
'வெளி' அதன் ‘பங்கீடு' பற்றிய செய்திகள் வரலாற்றுப் பின்னணியாக மட்டும் அமைந்துவிடவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் 90 விழுக்காடு ஊர்களில் இந்தப் 'பங்கீடு' இன்னும் மறையவில்லை; உயிரோடு இருக்கின்றது. சாகிப் பாகுபாட்டோடும் படிநிலை வரிசையோடும் அமைக்கப்பட்ட தெருக்கள் வரிசையே இன்றும் காணப்படுகின்றது. எனவே அண்மைக்கால நிகழ்வுகளில் களம் (அ) வெளி உயிரோட்டமுள்ள பங்கினைத் தொடர்ந்து வகித்துவருகிறது.
1930களில் தேசிய இயக்கத்தினர் சமூக உரிமைக் குரல்களை 'ஆலயப் பிரவேசம்' என்னும் புதிய தளத்தில் முன் வைத்தனர். தமிழ்நாட்டில் 1932 முதல் 39 முடிய எட்டாண்டுக் காலம், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு' என்பது அரசியல் அரங்கில் பெரிதும் பேசப்பட்ட சிக்கலாகும். 1939இல் சென்னை மாகாண அரசு ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலய உரிமை நுழைவுக்கான சட்டத்தை இயற்றியது. ஆனால் நடைமுறையில் இது பழைய ஊர்களிலும் புகழ்பெற்ற நகரங்களிலும் இருந்த, பெருந்தெய்வக் கோயில் நுழைவாகவே இருந்துவிட்டது. கோயில் நுழைவு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் இச் சிக்கலில் அர்வமில்லாமல்தான் இருந்தனர். ஏனென்றால் கிராமப்புறங்களில் நாட்டார் தெய்வக் கோயில்களில் ஒடுக்கப் பட்ட மக்கள் நுழைவதும் விழாக்களில் உரிமையுடன் பங்கெடுப்பதும் அன்று தேசிய, திராவிட இயக்கத்தினரின் சக்திக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது என்பதுதான் உண்மை. 1994இல் நாட்டார்கள் "திருவிழாக்களில் தலித் மக்கள் குதிரை (புரவி) எடுக்கக் கூடாது என விதித்த தடையை மீறியதால் சித்தனூர் பூச்சி என்ற தலித் கொல்லப்பட்டார். 1979இல் கோயிலில் தலித் மக்கள் நுழைந்ததால் கலவரம் ஏற்பட்டு உஞ்சனையில் தலித் மக்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். (மக்கள் பண்பாடு - இதழ் ஜூலை – டிசம்பர் 1998 - சென்னை - 69) 1980இல் தேவகோட்டை அருகே பாகனேரி பில்வ நாயகி அம்மன் கோயிலில் பிற்படுத்தப்பட்ட 'நாட்டார் கள்ளர்' வகுப்பினரோடு போராடியே தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவு உரிமை பெற்றது இதற்கு ஒரு சான்றாகும். ஆக, 1930களின் இறுதியில் முடிந்துபோனதாக அரசியல் கட்சிகள் கருதிய ஒரு சமூக உரிமைச் சிக்கல், நாடு விடுதலை பெற்று 50 ஆண்டுக்காலம் கழித்துச் சமூக அரசியல் உரிமைச் சிக்கலாகப் புதிய வடிவம் காட்டுகிறது.
இந்த மாற்றத்திற்கான காரணத்தை நாம் சமூக அரசியல் தளத்தில்தான் விளங்கிக் கொள்ள வேண்டும் 1930களில் தேசிய இயக்கத்தினர் முன்வைத்த 'கோயில் நுழைவு' மரபுகளை மீறுவதாகவோ மோதல்களை எதிர்கொள்ளத் தயாரான போராட்டமாகவோ அமையவில்லை. மரபுகளை மீறுவதற்குப் பதிலாக மரபுகளை ‘மாற்றிக் கொள்ளுமாறு' ஆதிக்க சாதியினருக்கு விடப்பட்ட வேண்டுகோளாகவே அது அமைந்தது. அதாவது, பரந்த மனப்பான்மை பெற்று மேல் சாதியினர் தாமே முன்வந்து கொடுக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்ளும் போக்கில் அது அமைந்திருந்தது.
ஆனால் அண்மைக்கால நிகழ்வுகள் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் தன்னுணர்ச்சி பெற்று, தாங்களே தேடிக்கொண்ட அரசியல் தலைமையின்கீழ், தங்கள் உரிமையினைத் தாங்களே எடுத்துக்கொள்ளும் வடிவத்தில் அமைந்திருக்கிறது. 1930களில் பெருந் தெய்வக் கோயில்களில் பார்ப்பனர் வகித்த பாத்திரத்தை 1990களில் நாட்டார் தெய்வக் கோயில்களில் பிற்படுத்தப்பட்ட ஆனால் ஆதிக்க உணர்வுடைய சாதியினர் வகிக்கின்றனர். எனவே தான் மரபு மீறல் அல்லது மீறப்படுதல் என்பது மோதலுக்குரிய காரணமாக அமைகின்றது. புதிய அரசியல் கருத்தாக்கங்களின் பின்னணியில் இந்த ‘மீறலும் மோதலும்' தவிர்க்க முடியாதவை யாகும்.
COMMENTS